Monday, May 23, 2011

சுவாமிக்கு உதயத்தின் கண்ணீர் அஞ்சலி....!



மட்டக்களப்பு மாதாவின் மடியில் வந்துதித்த சுவாமி விபுலாநந்தர் எடுத்த
பணியைத் தொடர்ந்தவர் சுவாமி அஜராத்மானந்தா ஜீ அவர்கள்
இராமகிருஷ்னமிஷன் கிழக்கிலங்கை கல்வி அபிவிருத்திக்கு கிறிஸ்தவமிஷன்
போன்று அளப்பரிய பணியை ஆற்றியிருக்கின்றது. கிழக்கில் சகல இனமக்களும்
மதத்தவரும் எந்த வேறுபாடுமற்றவகையில் ஒரே கூரையின்கீழ் கல்வியைப்பெறும்
வாய்ப்பினை மிஷன் வழங்கியது.
சுவாமி ஜீவானந்தாஜீயைத் தொடர்ந்து இப்பணியைப் பொறுப்பேற்று செவ்வனே
செய்தவர் மறைந்த சுவாமிஜீ அவர்கள். இதன்மூலம் ஆதரவற்ற வறிய
மாணவர்களுக்கு கல்விச்செல்வம் ஊட்டப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில்
கிழக்கில் ஏற்பட்ட சுனாமி வெள்ளம் யுத்தப்பாதிப்புக்களின்போது சுவாமி
அஜராத்மாநந்தா அவர்கள் மக்கள் மத்தியில் நின்று ஆற்றிய மகத்தான
பணிகளை மறக்க முடியாது.
சுவாமியின் மறைவையொட்டி துயரில் ஆழ்ந்திருக்கும் அனைத்து இல்ல
மாணவர்களுக்கும் மிஷன் நிர்வாகத்தினருக்கும் ஒரு சமூக ஆன்மீகத்
தலைமத்துவத்தை இழந்து தவிக்கும் அனைத்து மக்களுக்கும் சுவிஸ் வாழ்
உதயம் உறவுகள் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
சுவாமியின் ஆத்மா சாந்திஅடைய பிராத்திக்கின்றோம்.
உதயம் உறவுகள்
சுவிஸ்

Tuesday, April 19, 2011

கிழக்குப் பல்கலைக்கழகம் இன்று மீண்டும் ஆரம்பம்…

காலவரையறையின்றி மூடப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தின் விரிவுரைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி பிரேமகுமார் தெரிவித்தார். வந்தாறுமூலை வளாகத்தில் அமைக்கப்பட்டிரு க்கும் பொலிஸ் காவலரணை நீக்குமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தை காலவரையறையின்றி மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்தது. இந்த நிலையில் விரிவுரைகளை இன்று முதல் ஆரம்பிக்க தீர்மானித்திருப்பதாகவும், அனைத்து மாணவர்களையும் விரிவுரைகளுக்குச் சமுகமளிக்குமாறு அறிவித்திருப்பதாகவும் பதில் உபவேந்தர் தெரிவித்தார். பொலிஸ் காவலரணை அகற்றுவது தொடர்பாக பொலிஸ் தரப்பினருடனும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும் எனினும், பொலிஸ் காவலரணை அகற்றாமல் கடமையிலிருக்கும் பொலிஸாரைத் தேவையேற்படும் பட்சத்தில் மாற்றமுடியமென்று தமக்குப் பதில் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார். விடுதிகளிலுள்ள மாணவர்கள் நேற்று மாலைக்குள் விடுதி திரும்ப வேண்டுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த கலாநிதி பிரேமகுமார் இன்று முதல் விரிவுரைகள் ஆரம்பிக்கப்படும் என்று கூறினார்.

அரச முகாமைத்துவ இணைந்த சேவை மேலும் 2700 பேரை நியமிக்க அரசு நடவடிக்கை……

அரச முகாமைத்துவ இணைந்த சேவைக்கு மேலும் 2700 பேரை விரைவில் நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது. நாடளாவிய ரீதியில் நிலவும் ஐயாயிரம் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் அண்மையில் 2330 பேருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மேலும் 2700 வெற் றிடங்களுக்கும் நியமனங்களை துரிதமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்படி அமைச்சு மேற்கொண்டுள்ளது. திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களிலிருந்தே அண்மையில் 2330 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டதுடன் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படுவோரிலிருந்தும் அடுத்த கட்ட நியமனங்கள் வழங்கப்படு மென அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட் சையின் பெறுபேறுகள் இதுவரை பொது நிர்வாக உள்நாட்டலு வல்கள் அமைச்சுக்குக் கிடைக்கவில்லை எனவும் பரீட்சைகள் திணைக்களத்திலிருந்து அந்த பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றதும் மீதமுள்ள வெற் றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாகவே நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரச முகாமைத்துவம் இணைந்த சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சைகள் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் நடை பெற்றன. பல்லாயிரக் கணக்கானோர் இப்பரீட்சைகளில் தோற்றினர். திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்குக் கொழும்பில் நேர்முகப் பரீட்சைகளும் நடத்தப்பட்டன. இதன் மூலம் 2330 பேர் தகுதியானவர்களென தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அண்மையில் நியமனங்கள் வழங்கப்பட்டன. கடந்த மாதங்களில் நாடளாவிய ரீதி யில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக நேர்முகப் பரீட்சைக்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக் கடிதம் அவர்களுக்கு உரிய காலத்தில் கிடைத்திருக்கவில்லை. இத்தகைய காரணங்களினால் விடுபட்ட சுமார் 700 பேருக்கான நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளன. இவர்களை கொழும்புக்கு அழைத்து நேர்முகப் பரீட்சை நடத்தப்படுமெனவும் அதன் பின்னர் தகுதியானோர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அரச முகா மைத்துவ இணைந்த சேவையில் நிய மனங்கள் வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்

Saturday, April 16, 2011

புத்தாண்டு கால விபத்துகள், வன்முறைகள் 18 பேர் பலி 600 பேர் காயம் மது, போதைப்பொருள் பாவனை மற்றும் பட்டாசு வெடி விபத்துகள் குறைவு…..

தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் இடம் பெற்ற வெவ்வேறு விபத்துக்களின் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக பொலிஸார் நேற்றுத் தெரிவித்தனர். இவ் விபத்துக்களின் போது உயிரிழந்திருப்பவர்களில் நால்வர் 12 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் என்றும், ஐவர் இளைஞர்கள் என்றும் ஏனையவர்கள் நடுத்தர மற்றும் முதுமை வயதை உடையவர்கள் என்றும் பொலிஸார் கூறினர். வாகன விபத்துக்கள், கத்திக்குத்து, கங்கைகளில் நீராடிய போது ஏற்பட்ட விபத்து மற்றும் உமா ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் விபத்து என்பன காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒன்பது பேரும், நண்பர்கள் உறவினர்களோடு கங்கைகளில் நீராடிய ஐவரும், உமா ஓயா நீர் மட்டம் திடீரென உயர்ந்ததால் காட்டுக்குச் சென்று விறகு சேகரித்துக் கொண்டு வீடு திரும்பிய மூன்று சிறுமிகளுமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர்கள் கூறினர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நண்பர்கள் சிலருடன் குடிபோதையில் இளைஞர் ஒருவர் சக நண்பர்களினால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கம்பளை மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்தக் கொலையுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேநேரம் பண்டிகைக் காலத்தில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக 570 பேர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக கொழும்பு பெரியாஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவு நேற்று தெரிவித்தது. இதில் 411 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். 159 பேர் தங்கி சிகிச்சை பெறுவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறின.